கூரை எரித்த பகவான் நரஸிம்மர்

ஸ்ரீதாம் மாயாபூரில் பகவான் நரசிம்மர் தோன்றிய வரலாறு


வழங்கியவர்: ஸ்ரீமதி தேவி தாஸி



1984ம் வருடம், மார்ச் மாதம் 24ம் தேதியன்று மதியம் 12:20 மணியளவில், சுமார் முப்பத்தைந்து குண்டர்கள், ஸ்ரீதாம் மாயாபூரில் உள்ள இஸ்கானின் சந்திரோதய கோயிலை ஆயுதங்களுடனும் குண்டுகளுடனும் தாக்கினர்.


பக்தர்களை மிகவும் மோசமாக தாக்கிய  கொள்ளையர்கள் ஸ்ரீல  பிரபுபாதரின் மூர்த்தியையும் ஸ்ரீமதி ராதாராணியின் விக்ரஹத்தையும் திருடிச் செல்ல முடிவு செய்தனர்.


இதனால் மிகவும் அதிர்ச்சிக்குள்ளான பக்தர்கள், அக்கொள்ளையர்களை பயமின்றி எதிர் கொண்டனர்.


ஸ்ரீல பிரபுபாதரையும், ஸ்ரீமதி ராதாராணியையும் கடத்திச் செல்வதை அவர்களால் எவ்வாறு பார்த்துக் கொண்டிருக்க முடியும்?


சண்டை தீவிரமடைய, துப்பாக்கி குண்டுகள் அங்குமிங்கும் பாய்ந்தன, சில கொள்ளையர்கள் பலியாயினர், பக்தர்கள் சிலரும் பாதிக்கப்பட்டனர்.


இறுதியில் கொள்ளையர்களின் திட்டம் முறியடிக்கப்பட்டது. ஸ்ரீல பிரபுபாதரின் மூர்த்திக்கு எந்த பாதிப்பும் இல்லை, ஆயினும்


ஸ்ரீமதி ராதாராணியின் உருவம் சேதமடைந்த காரணத்தினால், அதன் பின்னர் அவரால் விக்ரஹ மேடையை அலங்கரிக்க முடியாமல் போய்விட்டது.


இந்நிகழ்ச்சி பக்தர்களின் மனதை மிகவும் பாதித்தது.


இதுபோன்ற தாக்குதல்களையும் துன்பங்களையும் சந்திப்பது மாயாபூர் பக்தர்களுக்கு முதல்முறை அல்ல என்பதால், இவற்றிற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண கோவில் நிர்வாகிகள் ஆயத்தமாயினர்.


மாயாபூர் இஸ்கான் ஆலயத்தின் அப்போதைய இலை இணை இயக்குனரான திரு. பவானந்த தாஸ், பகவான் நரசிம்மதேவரைப் பிரதிஷ்டை செய்யுமாறு அறிவுறுத்தினார்.


முன்னொரு காலத்தில் பகவான் ஸ்ரீ சைதன்யான் அவதார ஸ்தலமாகிய யோகபீடத்திற்கு வருகைதரும் பக்தர்களை கொள்ளையர்கள் பயமுறுத்தியபோது,


ஸ்ரீல பக்திவினோத தாகூரும், அவரது மகல் மகன் ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரும், உடனடியாக ஸ்ரீஸ்ரீ இலட்சுமி நரசிம்மரை பிரதிஷ்டை செய்தனர்.


அதன் பின்னர், அங்கு அதுபோன்ற தடங்கல்கள் ஏதும் ஏற்படவில்லை . அதனை நினைவுகூர்ந்த பவானந்தர், இஸ்கான் கோவிலிலும் நரசிம்மரை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதில் ஆவலுடன் இருந்தார்.


வரைபடங்களும் நன்கொடையும்


பவானந்தரின் வேண்டுகோளின்படி, திரு. பக்திசித்தாந்த தாஸ், திரு. ஆத்ம தத்துவ தாஸ் ஆகிய இருவரும் சில படங்களை வரையத் தொடங்கினர்.


“விக்ரஹத்தின் கால்கள், குதிப்பதற்குத் தயாராக வளைந்திருக்க வேண்டும். அவர் மிகவும் உக்கிரமான முறையில் சுற்றும் முற்றும் பார்ப்பதைப் போலஅமைய வேண்டும். அவரது விரல்கள் வளைந்திருக்க வேண்டும். அவருடைய தலையிலிருந்து தீ ஜ்வாலைகள் வரவேண்டும்" என்று பவானந்தர் விவரிக்க,


அதனை ஆத்ம தத்துவ தாஸ் அப்படியே வரைந்தார். பக்தர்கள் அவ்வரைபடத்தை ரசித்தனர்; திரு. பங்கஜாங்கிரி தாஸ் நரசிம்மரை பூஜிக்க ஒப்புக்கொண்டார்.


கல்கத்தாவில் வசித்த செல்வந்த பகதர வசித்த செல்வந்த பக்தரான, திரு. ராதாபாதர் விக்ரஹத்தை வடிவமைக்கும் செலவையும், பிரதிஷ்டை செய்வதற்கான செலவையும் ஏற்க முன் வந்தார்.


அவர் உடனடியாக எந்த தயக்கமும் இன்றி 1,30,000 ரூபாய் நன்கொடையை வழங்கினார். அப்போது நரசிம்மர் மூன்று மாதத்தில் பிரதிஷ்டை செய்யப்படுவார் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.


ஸ்தபதி தேடும் படலம்


அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக, ஆத்ம தத்துவ தாஸ் தென்னிந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


கிருஷ்ணரின் கருணையினால் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஸ்தபதியை அவர் கண்டுபிடித்தார்.


வடிவமைக்கவிரும்பும் விக்ரஹம், உக்கிர நரசிம்மர் என்பதை கேட்கும்வரை அந்த ஸ்தபதி மிகவும் சாதகமாக இருந்தார்.


ஆனால் உக்கிர நரசிம்மர் என்பதைக் கேட்ட மாத்திரத்தில், உறுதியாக மறுப்பு தெரிவித்தார். இதர ஸ்தபதிகளும் மறுப்புத் தெரிவிக்க,


ஆத்ம தத்துவ தாஸ் மாயாபூருக்கும் தென்னிந்தியாவிற்கும் இடையில் பலமுறை பயணம்மேற்கொண்டார். ஆறு மாதங்கள் உருண்டோடின.


முதன் முதலில் சந்தித்த ஸ்தபதியையே மீண்டும் சந்திக்க, இம்முறை அவர் சிறிது அனுகூலமாக நடந்து கொண்டார்.


சிற்ப சாஸ்திரத்திலிருந்து (விக்ரஹங்களையும் கோவிலையும் வடிவமைப்பதற்கான கலை குறித்த சாஸ்திரத்திலிருந்து) ஓர் அத்தியாயத்தைப் படித்துக் காட்டினார்.


அதில் விக்ரஹங்களின் பலவித உருவங்களைப் பற்றி விளக்கப்பட்டிருந்தது. பகவான் நரசிம்மரைப் பற்றி விளக்கும் சில ஸ்லோகங்களை உரக்கப் படித்துக் காண்பித்தார்.


நரசிம்மரின் நெருப்பை ஒத்த நீளமான பிடறி முடியையும், தேடும் நோக்கத்துடனான பார்வையையும், முழங்கால்கள் ஓர் அடி முன்புறம் வளைந்து தூணில் இருந்து குதிப்பதற்குத் தயாராக


இருப்பது போன்ற நிலையையும் அவை விளக்கின. அவ்விளக்கங்களைக் கேட்ட ஆத்ம தத்துவர் மிகவும் ஆச்சரியப்பட்டார்; ஏனெனில், அவர் விரும்பி வரைந்து வைத்திருந்த வரைபடததை  ஒத்திருந்தது அவரது விளக்கங்கள்.


வரைபடத்தைப் பார்த்த ஸ்தபதி,சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அதனைச் சற்றுமாற்றியமைக்க வேண்டும் என்றார்.


அவரே புதிய வரைபடத்தை வரைந்து ஒரு வாரத்தில் கொண்டு வந்தார். வரைபடம் மனத்திருப்தியை வழங்க, அந்த ஸ்தபதிதான் விக்ரஹத்தை வடிவமைக்க வேண்டும் என்று அனைவரும் விரும்பினர்.


அவரை ஒப்புக்கொள்ள வைப்பதற்காக ஆத்ம தத்துவ தாஸ் மீண்டும் தென்னிந்தியாவிற்கு அனுப்பப்பட்டார்.


நேராக ஸ்தபதியின் வீட்டிற்குச் சென்ற ஆத்ம தத்துவ தாஸ், பகவான் நரசிம்ம தேவர் தேவரிடம் கருணை காட்டும்படியும், மாயாபூர் தாமத்தில் உள்ள நம் கோயிலில் எழுந்தருள ஒப்புக்கொள்ளும்படியும் வேண்டிக் கொண்டார்.அதைத் தவிர அவரால் வேறு என்ன செய்ய முடியும்?


ஸ்தபதியிடம் அவர் இரண்டொரு வார்த்தைகள்தான் பேசியிருப்பார். ஆச்சரியம் என்னவெனில், ஸ்தபதி அந்த விக்ரஹத்தை வடிவமைப்பதாக ஒப்புக் கொண்டார்.


ஸ்தபதி தனது முடிவை மாற்றிக் கொண்டதற்கான கதை மிகவும் சுவாரஸ்யமானது.


காஞ்சி மடத்தின் அப்போதைய சங்கராசாரியரான ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதியே ஸ்தபதியின் குருவாவார்.


இஸ்கானின் வேண்டுகோளைப் பற்றி விவாதிக்க அந்த ஸ்தபதி தனது குருவைச் சந்தித்திருந்தார்.


அப்போது, “அதை செய்து கொடுக்காதே, உன்னுடைய குடும்பம் அழிந்து விடும்” என்று உடனடியாக பதிலளித்தார்.


இருப்பினும், சிறிது யோசனைக்குப் பிறகு, “இந்த விக்ரஹத்தை (உன்னிடம்) வடிவமைக்கச் சொன்னது யார்?" என்று வினவினார்.


மாயாபூரில் உள்ள ஹரே கிருஷ்ண இயக்கத்தினர் தான் இதனை வடிவமைக்கச் சொன்னார்கள் என்று அவர் பதில் கூற சங்கராசாரியர் சிறிது கவலைப்பட்டார்: “அவர்கள் உக்கிர நரசிம்மரை விரும்புகிறார்களா?


உக்கிர நரசிம்மரை வடித்து பிரதிஷ்டை செய்வதன் விளைவுகளைப் பற்றி அவர்களுக்குத் தெரியுமா? மிகவுயர்ந்த ஸ்தானத்தில் இருந்த ஸ்தபதிகளால் 3000 வருடங்களுக்கு முன்பு இம்மாதிரி விக்ரஹங்கள் வடிவமைக்கப்பட்டன,


மைசூருக்குப் போகும் வழியிலுள்ள ஓரிடத்தில் மிகவும் பயங்கரமான உக்கிர நரசிம்மர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.


அவருடைய மடியின் மீது அரக்கன் ஹிரண்யகசிபுவின் வயிறு கிழிக்கப்பட்டு அவனுடைய குடலானது விக்ரஹ மேடை முழுவதும் சிதறிக் கிடக்கின்றது.


ஒரு காலத்தில் அங்கு வழிபாட்டு முறைகள் மிகவும் உயர்ந்த நிலையில் இருந்தன. தினமும் திருவிழாக்களும் யானை ஊர்வலமும் இருப்பது வழக்கம்.


ஆனால் சிறிது சிறிதாக வழிபாட்டின் தரம் குறைய ஆரம்பித்தது. இன்று அந்த இடம் ஒரு பேய் நகரம் போல காட்சியளிக்கிறது.


யாரும் அங்கு அமைதியுடன் வாழ முடியாது. இதைத்தான் அவர்கள் (இஸ்கான்) தங்களது திட்டத்தில் எதிர்பார்க்கிறார்களா?”


ஸ்தபதி பதிலளித்தார்: “அவர்கள் அதையே வலியுறுத்துகின்றனர். விக்ரஹத்தைப் பற்றிப் பேச அவர்கள் தொடர்ந்து என்னிடம் வருகின்றனர்.


கொள்ளையர்களின்பிரச்சனை இருப்பதே அவர்கள் நரசிம்மரை எதிர்பார்ப்பதற்கான காரணம்.” விக்ரஹத்தின் வரைபடத்தை ஸ்தபதி தனது குருவிடம் வழங்க,


அவரோ, "உக்கிர நரசிம்மரில் ஒன்பது வகைகள் உண்டு ,


அதில் இந்த நரசிம்மர் ஸ்தானு நரசிம்மர் என்னும் வகையைச் சார்ந்தவர். இவரைப் போன்ற விக்ரஹம் இந்த உலகத்தில் வேறு எங்குமே இல்லை.


ஸ்வர்க லோகங்களில் உள்ள தேவர்கள்கூட இம்மாதிரி ஓர் உருவத்தை வழிபடுவது இல்லை. அவர்கள் விரும்பும் ஸ்தானு நரசிம்மர், தூணிலிருந்து வெளியே வருபவர்,


ஹிரண்யகசிபு அகப்படுவதற்கு முன்பு உள்ள தோற்றம். வேண்டாம்.


இந்த விக்ரஹத்தை நீ வடிவமைக்காதே,  அஃது உனக்கு மங்களகரமானதாக இருக்காது. நான் பிறகு இதைப் பற்றி உன்னிடம் பேசுகிறேன், என்று கூறி முடித்துக் கொண்டார் 


சில நாள்களுக்குப் பிறகு, அந்த ஸ்தபதியின் கனவில் தோன்றிய சங்கராசாரியர், "அவர்களுக்கு நீ ஸ்தானு நரசிம்மரை வடித்துக் கொடுக்கலாம், என்று உரைத்தார்.


மறுநாள் காலை, மடத்திலிருந்து சங்கராசாரியர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று வந்தது.


அதில் கோவில் புதுப்பிப்பது பற்றிய சில விஷயங்கள் கூறப்பட்டிருந்தன. அக்கடிதத்தின் அடியிலிருந்த ஒருகுறிப்பில்,


அக்கடிதத்தை இஸ்கான் பக்தரிடம் காட்டிய ஸ்தபதி,


"எனக்கு என் குருவின் ஆசீர்வாதம் இருக்கின்றது. உங்களுக்கான விக்ரஹத்தை நான் வடிவமைத்துத் தருகிறேன், என உறுதியளிக்க ஆத்ம தத்துவ தாஸ் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தார்.


முன்தொகையை ஸ்தாபதியிடம் அளித்து, விக்ரஹத்தை வடிவமைத்து முடிக்க எவ்வளவு காலம் பிடிக்கும் என்று வினவினார். விக்ரஹம் ஆறு மாதத்திற்குள் பிரதிஷ்டை செய்யத் தயாராக இருப்பார் என்று ஸ்தபதி பதிலளிக்க, பக்தர் மாயாபூருக்குத் திரும்பினார்.


கல்லைத் தேடும் படலம்


மாயாபூரில் நான்கு மாதங்களை அமைதியாகக் கழித்த ஆத்ம தத்துவர், தென்னிந்தியாவிற்குச் சென்று நரசிம்ம தேவரை வழிபடுவதற்குத் தேவையான கனமான பித்தளையால் செய்யப்பட்ட பூஜை சாமான்களை வாங்கிவிட்டு, விக்ரஹத்தையும் கொண்டுவர முடிவு செய்தார்.


அவரது பயணம் நல்ல முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு, ஸ்தபதியை சந்திக்கும்வரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. வழிபாட்டிற்குரிய எல்லா பூஜை சாமான்களும் வாங்கப்பட்டு விட்டன;


விக்ரஹத்தை எடுத்துச் செல்ல வந்துள்ளதாக ஸ்தபதியிடம் கூற, அவர் அறிவற்றவனைப் பார்ப்பதுபோல ஆத்ம தத்துவரைப் பார்த்தார்:


"விக்ரஹமா? நான் இன்னும் அதற்குத் தகுந்த கல்லைக்கூட கண்டுபிடிக்கவில்லையே!" தன் காதுகளை நம்ப முடியாத ஆத்ம தத்துவர், “ஆனால் ஆறு மாதத்தில் நரசிம்மர் தயாராகி விடுவார் என்று கூறினீர்களே!” என்று கேட்டார்.


"நான் என் வார்த்தையைக் காப்பாற்றுவேன்,


கல் கிடைத்த பின் ஆறு மாதத்திற்குள் நரசிம்மர் பிரதிஷ்டை செய்யத் தயாராகி விடுவார்." ஸ்தபதியின் பதில் அழுத்தம் திருத்தமாக இருந்தது.


ஆனால் தாமதத்தை புரிந்துகொள்ளவோ ஒப்புக்கொள்ளவோ முடியாமல், விரக்தியில் மூழ்கிய பக்தர்,


“தென்னிந்தியா முழுவதும் நிறைய கருங்கற்கள் இருக்கின்றன. உங்களுக்கு கல் கிடைப்பதில் என்ன கஷ்டம்?” என்று சவால்விடும் தொனியில் வினவினார்.


ஸ்தபதியோ, “நான் உரல் செய்யவில்லை, விக்ரஹம் வடிக்கிறேன். விஷ்ணு விக்ரஹத்தை செய்ய உயிரோட்டமுள்ள கல்லைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று வேத நூல்கள் தெரிவிக்கின்றன.


எந்தக் கல்லின் மீது ஏழு இடத்தில் தட்டினால், அவை ஒவ்வொன்றும் சாஸ்திரங்களில் கூறப்பட்ட சப்தத்தை எழுப்புமோ, அந்தக்கல் பொருத்தமானதாக இருக்கலாம்.


அந்தக் கல்லில் உயிரோட்டம் உள்ளதா என்று பார்க்க, இரண்டாவது பரிசோதனை ஒன்றும் உள்ளது.


கருங்கல்லை சாப்பிடும் பூச்சியானது கல்லின் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்கு சாப்பிட்டுக் கொண்டே சென்று, சிறு தடயத்தை பின்னால் விட்டுச் சென்றால் இரண்டாவது பரிசோதனையிலும் வெற்றி பெற்றதாகக் கருதலாம்.


அதுவே உயிரோட்டமுள்ள கல். அதிலிருந்து பேசும் ஒலி அதிர்வுகள் வெளிப்படும்.


அதுபோன்ற கல்லில் இருந்துதான் உங்கள் நரசிம்மரை என்னால் வடிக்க முடியும். அவ்வாறு வடிக்கப்படும் சிலை, விக்ரஹத்திற்கான எல்லா அம்சங்களையும் வெளிப்படுத்துவதுடன், அழகாகவும் அமையும்.


தயவுசெய்து அமைதியாக இருங்கள். உங்களுக்காக ஆறு அடி கல்லை சிரத்தையுடன் தேடி வருகின்றேன்." என்று பதிலளித்தார்.


பிரகலாதரின் விக்ரஹம்


ஆச்சரியத்தில் மூழ்கிய ஆத்ம தத்துவர், இவற்றை எவ்வாறு மாயாபூரில் உள்ள பக்தர்களிடம்விளக்குவது என்பதை யோசித்தபடி, பிரகலாதரின் விக்ரஹமும்வேண்டும் என்பதை ஸ்தபதியிடம் எடுத்துரைத்தார்.


“அது முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை." உண்மையைப் போட்டு உடைப்பதுபோல் ஸ்தபதி கூறினார். சற்று இடைவெளிக்குப் பின், சிரித்துக் கொண்டே தொடர்ந்தார்:


“நீங்கள் எல்லாவற்றையும் சாஸ்திரங்களில் உள்ளபடியே செய்ய விரும்புகிறீர்கள். உங்கள் நரசிம்மதேவர் நான்கு அடி உயரம் இருப்பார், பிரகலாதர் ஓர் எறும்பின் அளவில் இருப்பார்."


அவரை இடைமறிக்க ஆத்ம கத்துவர், "ஆனால் எங்களுக்கு ஒரு அடி உயரமுள்ள பிரகலாதர் வேண்டும்," என்றார். “சரி. அப்படியெனில் நரசிம்மர் 120 அடி உயாம் இருக்க வேண்டும்” என ஸ்தபதி பதிலளிக்க,


அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின்னாக பிரகலாதரின் அளவைப் பற்றி விவாதித்தனர். இறுதியில், ஸ்தபதி பெருமூச்சுடன் தன் நிலையை விட்டுக் கொடுத்து, ஓரடி உயர பிரகலாதரை வடிக்க ஒப்புக் கொண்டார்.


நரசிம்மர் தயாராகுதல்


மாயாபூர் சென்ற ஆத்ம தத்துவர் இரண்டு மாதங்களுக்குப் பிறகு தென்னிந்தியா திரும்பினார். அங்கு எந்தவிதமுன்னேற்றமும் இல்லை.


முப்பது அல்லது நாற்பது நாள்களுக்கு ஒருமுறை மாயாபூருக்கும் தென்னிந்தியாவிற்கும் வந்து போனார். இறுதியாக, கல் கண்டுபிடிக்கப்பட்டது,


கல் கிடைத்தவுடன் ஸ்தபதி முழுவதும் மாறிவிட்டார். வீட்டில் சிறிது நேரத்தைத்தான் செலவழிப்பார்; நாள் கணக்கில் பல மணி நேரம் அவர் வெறுமனே அந்தக் கல்லைப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பார்.


அவர் கையில் சுண்ணாம்புக்குச்சி இருந்தது. ஆனாலும் அவர் எதையும் வரையவில்லை . அந்தக் கருங்கல்லின் வேண்டாத பகுதிகளைச் செதுக்கி அதனைச் செவ்வகமாகச் செய்வதைத் தவிர, வேறு  எதையும் செய்யவில்லை . அவருடைய வேலையாட்களையும் மேற்கொண்டு எதற்கும் அனுமதிக்கவில்லை .


அடுத்த முறை ஆத்ம தத்துவர் அவரைக் காணச் சென்ற போது, அந்தக் கல்லின் மீது ஸ்தபதி படம் வரைந்து வைத்திருந்தார்; அது மட்டுமே.


மாயாபூரில் உள்ள மேலாளர்கள் பொறுமை இழப்பதால், பக்தர் மிகவும் கவலை கொண்டார். “இந்த விக்ரஹம் ஆறு மாதங்களில் செய்து முடிக்கப்படும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? எனநம்பிக்கையின்றி அவர் ஸ்தபதியிடம் கேட்க,


“கவலைப்பட வேண்டாம், இந்த வேலை முடிக்கப்படும்” என்று அவர் பதிலளித்தார்.


ஆத்ம தத்துவர் அடுத்த முறை வந்தபோது, அந்த ஸ்தபதி தானே விக்ரஹத்தினை, மிகவும் சிரத்தையான முறையில் பக்தியுடன் வடித்துக் கொண்டிருந்ததைக் கண்டார்.


அந்தக் கல் மாற்றம் பெற்று உருவம் தென்பட ஆரம்பித்திருந்தது. ஸ்தபதி அச்சமயத்தில் பகவானின் கைக்காப்புகளை வடிக்கத் தொடங்கினார்,


அதற்கு அவருக்கு இரண்டு வாரங்கள் ஆயிற்று. எல்லா அம்சங்களும் நுணுக்கமாகவும், மனதுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியவை யாகவும் இருந்தன.


கூரையை எரித்த நரசிம்மர்


இறுதியில், விக்ரஹத்தை வடிக்க ஸ்தபதிக்கு பன்னிரண்டு மாதங்களுக்கும் அதிகமாகவே பிடித்தது.


வேலை முடிந்தவுடன் அதனை உடனடியாகத் தெரிவிக்காமல், சில நாள்களுக்கு தன் நண்பர்களைக் காணச் சென்றுவிட்டார்.


அது மழைக் காலம் என்பதால், அங்கு அதிகமான பார்வையாளர்கள் கிடையாது. எனவே, ஓலையால் வேயப்பட்ட அந்த குடிசையைப் பூட்டி, நரசிம்மதேவரை பத்திரப்படுத்தி விட்டுச் செல்வது பாதுகாப்பானது என்று அவர் கருதினார்.


இரண்டு நாள்களுக்குப் பிறகு, அருகில் இருந்தவர்கள் அவரிடம்  வந்து, ஓலைக் கொட்டகை தீப்பிடித்து விட்டதாகத் தெரிவித்தனர். மழைக் காலத்தில் தென்னை ஓலையால் வேயப்பட்ட கொட்டகை தீப்பற்றிக் கொண்டதை கேள்விப்பட்ட ஸ்தபதி ஆச்சரியத்துடன் உடனடியாக அங்கு விரைந்தார்.


ஆனால் கொட்டகை சாம்பலாகிவிட்டதையும், நரசிம்மதேவர் பாதிக்கப்படாமல் இருப்பதையும் அவர் கண்டார். உடனடியாக அவர் ஆத்ம தத்துவரைதொலைபேசியில் அழைத்தார்: "தயவுசெய்து இங்கு வந்து உங்கள் விக்ரஹத்தை எடுத்துச் செல்லுங்கள்.


நரசிம்மர் எல்லாவற்றையும் எரித்துக் கொண்டிருக்கிறார். அவர் இங்கிருந்து செல்ல முடிவு செய்து விட்டார்."


நரசிம்மர் மாயாபூர் வருதல்


மகிழ்ச்சியில் தத்தளித்துப் போன ஆத்ம தத்துவர், உடனடியாக தென்னிந்தியாவிற்குப் பயணம் செய்து,


ஒரு லாரியை ஏற்பாடு செய்து அதை பாதி மணலால் நிரப்பிக் கொண்டு ஸ்தபதியிடம் சென்றார்.


பகவான் நரசிம்மர் ஒரு கனமான உருவம் என்பதை மறந்துவிட்டார். நரசிம்மரோ ஒரு டன் எடை இருந்தார்!


இரண்டு, மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, விக்ரஹத்தைப் பாதுகாப்பாக கொட்டகையில் இருந்து லாரிக்குக் கொண்டு சென்றனர்.


மாநில எல்லைகளைப் பாதுகாப்பாகக் கடந்து செல்ல,


மத்திய விற்பனை வரி அலுவலர்களின் கையெழுத்திடப்பட்ட கடிதம்,


தொல்பொருள் கழகத்தின் இயக்குனர்,


தமிழக கலைக் களஞ்சியத்தின் இயக்குனர்


ஆகியோரின் அனுமதிக் கடிதங்கள், மற்றும்


காவல் துறையின் அனுமதியும் தேவைப்பட்டது.


தேவையான கடிதங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக எல்லா அலுவலர்களும் விக்ரஹத்தைப் பார்வையிட வேண்டும் என்று தெரிவித்தனர்.


நரசிம்மதேவரின் தரிசனத்திற்குப் பிறகு அவர்கள் அனைவரும் நன்கு ஒத்துழைத்ததுடன் விரைவாகவும் செயல்பட்டனர்.


தேவையான எல்லாக் கடிதங்களும் அனுமதியும் 24 மணி நேரத்திற்குள் பக்தர்களின் கைக்குக் கிடைத்தன.


சின்னஞ்சிறு விதிமுறைகளுக்கும், அரசாங்க வரைமுறைகளுக்கும் கட்டுப்பட்டு, தாமதப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்ட இந்திய அரசாங்க அலுவலகங்களின் இந்த வேகமான செயல்பாடு ஆச்சரியப்படக்கூடிய விஷயமாகவே பட்டது.


மாயாபூருக்குத் திரும்பிச் செல்லும் பயணமும் வியக்கத்தக்க விதத்தில் பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் அமைதியாக இருந்தது.


பக்தர்களின் பாதுகாவலரான நரசிம்மரே உடனிருந்த போது என்ன கவலை?


பிரதிஷ்டை நிகழ்ச்சி


பொதுவாக விக்ரஹம் பிரதிஷ்டை செய்யும் நாளன்றுதான் ஸ்தபதி அங்கு வந்து விக்ரஹத்தின் கண்களைத் திறப்பார்.


ஆனால் |ஸ்தபதியோ நரசிம்மரின்  விக்ரஹத்தின் கண்களை ஏற்கனவே திறந்து விட்டிருந்தார். 


பிராண பிரதிஷ்டை , சிறு பூஜை, ஆரத்தி என எல்லாவற்றையும் செய்து முடித்திருந்தார்.


அதனால்தான் எல்லாக் கடிதங்களும் நமக்குக் கட்டுப்பட்டு, சாதகமான முறையில் தயாரிக்கப்பட்டன என்றும், பகவானைக் கொண்டு செல்வதும் மிகவும் சுலபமாக இருந்தது, என்றும் ஆத்ம தத்துவர் உணர்ந்தார்.


இதர சடங்குகளுடன் நரசிம்ம தேவரை பிரதிஷ்டை செய்தல் எளிய முறையில், 1986, ஜுலை 28 முதல் 30 வரை மூன்று நாட்கள் நீடித்தது.


சங்கீர்த்தன இயக்கத்தின் பாதுகாவலரான பகவான் நரசிம்மதேவர் அன்று முதல் ஸ்ரீமாயாபூர் சந்திரோதய கோயிலில் பக்தர்களுக்குக் காட்சியளித்து அவர்களைப் பாதுகாத்து வருகிறார்.


உக்கிரம் நிறைந்தவராக விளங்கும் நரசிம்மர், பக்தர்களுக்கு கனிவானவர் என்பதை மாயாபூர் நரசிம்மர் நிரூபித்து வருகிறார்.


அனைத்து மிருகங்களையும் தனது கர்ஜனையாலேயே அச்சப்பட வைக்கும் சிங்கம், தனது குட்டிகளிடம் பரிவுடன் நடந்துகொள்வதைப் போல, அ


சுரர்களுக்கு அச்சத்தை விளைவிக்கும் நரசிம்மர், பக்தர்களைப் பரிவுடன் பாதுகாப்பவர். பக்தியில் இருக்கும் தடைகளைப் போக்க பக்தர்களுக்கு நரசிம்மர் உதவி வருகிறார்,


ஸ்ரீ  பகவான் நரசிம்மரை வழிபடுவோர் தங்களது பக்தியில் இருக்கும் தடைகள் நீங்கப் பெறுவதை எளிமையாக உணரலாம்.


 


Popular posts from this blog

பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன்  )

பாம்புகளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்