அவதாரம், பஞ்சபூத உ டல் அல்ல

அவதாரம், ஜடவுடல் அல்ல


கிருஷ்ணர் (விஷ்ணு) தனது ஆன்மீக உலகத்திலிருந்து ஜடவுலகிற்குள் இறங்கி வரும்போது, அவரது தோற்றம், அவதாரம் என்று அழைக்கப்படுகிறது.



அவதாரம் (இறங்கி வருபவர்) என்னும் சமஸ்கிருத வார்த்தை , ஆங்கிலத்தில் incarnation (carnis என்றால் சதை, incarnation என்றால் "சதையுடன் கூடிய உடலை ஏற்றுக்கொள்பவர் என்று பொருள்) என்று அடிக்கடி மொழிபெயர்க்கப்படுவதுண்டு. அவ்வாறு ஜடப் பொருள்களால் ஆன உடலில் கிருஷ்ணர் தோன்றுகிறார் என்று நினைத்தல் மாபெரும் தவறாகும்.


ஜடப் பொருள்களுக்கும் கடவுளின் சுயஆன்மீக இயற்கைக்கும் இடையிலான வேறுபாடு பகவத் கீதையில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் தற்காலிகமானவை, அழியக்கூடியவை.


ஆனால், கிருஷ்ணரின் இயற்கையோ, நித்தியமானது, வீழ்ச்சியடையாதது, நம்மால் காண இயலாது. இருப்பினும், கடவுள் தன்னுடைய கருணையினால் இங்கு இறங்கி வரும்போது மட்டும், காண இயலாத அவரை நம்மால் காண முடியும்.


எத்தனை அவதாரங்கள்?


கடவுளுக்கு பல்வேறு அவதாரங்கள் உண்டு. கடவுள் ஒருவரே என்றபோதிலும், அவரது அவதாரங்கள் எண்ணற்றோர்.


இந்தியாவில் பொதுவாக, மச்ச, கூர்ம, வராஹ, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, புத்த, கல்கி ஆகிய பத்து அவதாரங்கள், தசாவதாரம் என்ற பெயரில் கொண்டாடப்படுகின்றனர்.


கடவுள் அவதரிப்பதற்கான காரணம்


ஸ்ரீல பிரபுபாதர் தனது பகவத் கீதை (4.7) உரையில் எழுதுகிறார், “தர்மத்தின் மிகவுயர்ந்த கொள்கை தன்னிடம் சரணடைவதேயன்றி வேறொன்றுமில்லை என்பதை கீதையின் முடிவில் பகவான் நேரடியாக ஆணையிடுகிறார்.


வேதக் கொள்கைகள், அவரிடம் முழுமையாக சரணடைவதை நோக்கி ஒருவனைக் கொண்டு செல்கின்றன; அக்கொள்கைகள் அசுரர்களால் துன்புறுத்தப்படும்போது பகவான் தோன்றுகிறார்...


பகவானின் ஒவ்வொரு குறிப்பிட்ட அவதாரத்திலும் குறிப்பிட்ட நோக்கம் உண்டு, இவையனைத்தும் சாஸ்திரங்களில் விளக்கப்பட்டுள்ளன. சாஸ்திரங்களில் குறிப்பிடப்படாத எவரையும் அவதாரமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது...


சில சமயங்களில் அவர் தாமே வருகிறார். சில சமயங்களில் அவரால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியை மகன் அல்லது சேவகனின் வடிவில் அனுப்புகிறார், அல்லது வேறு சில சமயங்களில் அவரே மறைக்கப்பட்ட உருவில் தோன்றுகிறார்.


கடவுள் பௌதிக உடலை ஏற்கின்றாரா?


உருவம் என்றால் அதற்கு ஒரு வரம்பு உள்ளது என்று சிலர் நினைக்கின்றனர். கடவுள் வரம்புகளற்று எங்கும் நிறைந்தவர் என்பதால், அவருக்கு உருவம் கிடையாது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.


கடவுள் இந்த ஜடவுலகத்திற்குள் அவதார ரூபத்தில் வரும்போது, இடத்திற்கும் காலத்திற்கும் உட்பட்டு இருப்பதால், அந்த ரூபம் கடவுளின் உண்மை உருவமாக இருக்க முடியாது என்றும் கடவுளின் ஓர் அறிகுறியே என்றும் அவர்கள் நினைக்கின்றனர்.


ஆனால் உண்மை என்னவெனில், கடவுளின் உருவம் வரம்பிற்கு உட்பட்டதல்ல; உருவம் என்பது குறித்த நமது அறிவு மட்டுமே வரம்பிற்கு உட்பட்டது. ஏனெனில், நமது அறிவு கண்ணால் காண்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.


ஆன்மீகமான கடவுளின் உருவம் மிகவும் சூட்சுமமானது என்பதால், அவரது எங்கும் வீற்றிருக்கும் தன்மைக்கும் உருவத்திற்கும் எந்தவித முரண்பாடும் இருக்க முடியாது. உருவத்துடன் இருப்பதால், எங்கும் பரவியிருத்தல் என்னும் கடவுளின் தன்மை பாதிக்கப்படுவதில்லை.


ஆன்மீகமான இறைவனின் அந்த உருவத்தை சாதாரண சதையினால் ஆன உடலுடன் ஒப்பிடுதல் முற்றிலும் பொறுத்தமற்றது. என்றும் இளமையாக விளங்கும் அவரது ரூபம், நித்தியமானது, அறிவு நிறைந்தது, மற்றும் ஆனந்தமயமானது.


நாமும் அவதாரம் எடுக்க முடியுமா?


உடல் பெற்ற எல்லா நபர்களும் அவதாரங்களே என்று சிலர் வாதிடுகின்றனர்.  இந்தியாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் தங்களையே அவதாரமாகக் கூறுவோர் எண்ணற்றோர். ஆனால் அவர்களில் யாருமே வேத சாஸ்திரங்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் அல்ல.


ஒருவன் தன்னை அவதாரமாகக் கூறிக் கொள்ளலாம், ஆனால் கடவுள் அவதரிக்கும் போது செய்யக்கூடிய மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயல்களை அவன் வெளிப்படுத்த வேண்டும். “நான் கடவுள்” என்று வாயால் சொல்லிவிடுதல் எளிமை, கடவுளின் செயல்களைச் செய்ய வேண்டுமே!


இறைவனின் வசிப்பிடம்  நமது உண்மையான வீடும் அதுவே


ஆன்மீக உலகில் வசிப்பவர்கள் பிரகாசமானநீலநிறமேனியுடையவர்கள். அவர்களது கண்கள் தாமரையைப் போன்றவை, மஞ்சள் நிற உடையில் தோன்றும்


அவர்களது உடல் அங்கங்கள் மிகவும் வசீகரமானவை. என்றுமே பொங்கும் இளமையுடன் இருக்கும் அவர்கள், நான்கு கரங்களுடன், தங்கம், முத்து, வைரம் போன்றவற்றால் செய்யப்பட்ட ஆபரணங்களை அணிந்து மேலும் பிரகாசமாகத் தோன்றுகின்றனர்


அவர்களது நடைகளும் நடனமே, பேச்சு களும் பாடல்களே. அங்குள்ள மரங்கள் வேண்டியதை கொடுப்பவை. இந்த வர்ணனைகள், வேதங்களில் காணப் படுவதன் ஒரு சிறு துளியே ஆகும்.


ஆன்மீக உலகை விரும்பும் பக்தர்களுக்கு, ஒருபோதும் தற்கொலை எண்ணமோ மன அழுத்தமோ ஏற்பட்டதில்லை என்பதை கவனித்தல் மிகவும் அவசியம். ஏனெனில், அவர்கள் உண்மை அவதாரத்தின் வசிப்பிடமான ஆன்மீக உலகினைப் பற்றி மட்டுமே படிக்கின்றனர், கேட்கின்றனர் , தியானிக்கின்றனர்; போலி அவதாரத்தின் (?) கற்பனை உலகத்தைப் பற்றி அல்ல.


 


Popular posts from this blog

பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன்  )

பாம்புகளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்