கிருஷ்ணரே மகிழ்ச்சி
கிருஷ்ணரே மகிழ்ச்சி
வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியர் கடவுள் யார் என்பதை முறையாக அறிந்துகொள்ளாமல் போலி நபர்களை கடவுளாக ஏற்று பலரும் ஏமாற்றமடை கின்றனர். ஆனந்தத்தை தேடி அலையும் அவர்கள் உண்மையான ஆனந்தத்தை அணுகாத காரணத்தினால் தோல்வியடைகின்றனர். உண்மையை அணுகி வாழ்வில் வெற்றி பெற இதோ சில வழிமுறைகள்.
ஏகோனவிம்ஷே விம்ஷதிமே வ்ருஷ்ணிஷு ப்ராப்ய ஜன்மனீ ராம-க்ருஷ்ணாவ் இதி புவோ பகவான் அஹரத் பரம்
“பகவான் தனது பத்தொன்பதாவது மற்றும் இருபதாவது அவதாரத்தில் பலராமராகவும் கிருஷ்ணராகவும் விருஷ்ணி குலத்தில் (யது வம்சத்தில்) தோன்றி உலக பாரத்தைக் குறைத்தார்." (ஸ்ரீமத் பாகவதம் 1.3.23)
வாழ்வில் வெற்றி பெற
எங்கிருந்து வேண்டுமானாலும் கிருஷ்ணர் தோன்றலாம், இருப்பினும் அவர் விருஷ்ணி குலத்தை தேர்ந் தெடுத்தார். முதலில், பலராமர் விருஷ்ணி குலத்தில் தோன்ற, பின்னர் கிருஷ்ணர் தோன்றினார். கிருஷ்ணரின் ஒரு பெயர், வார்ஷ்ணேயர்; விருஷ்ணி குலத்தில் தோன்றியதால், கிருஷ்ணர் அவ்வாறு அழைக்கப்படுகிறார். சந்தன மரங்கள் எங்கு வேண்டுமானாலும் வளரலாம், ஆனால் அவை முன்பு மலேசியாவில் அதிகமாக விளைவிக்கப்பட்டன. அதனால் அந்த சந்தனக் கட்டைகள் மலயஜ-சந்தன-கட்டைகள் என்று அறியப்பட்டன. அதுபோல, விருஷ்ணி குலத்தில் தோன்றியதால், கிருஷ்ணரும் வார்ஷ்ணேயர் என்று அறியப்படுகிறார். ஆனால் கிருஷ்ணரின் பிறப்பும் செயல்களும் சாதாரணமானவை அல்ல, அவை தெய்வீகமானவை. ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத:. ஒருவர் கிருஷ்ணரை அவ்வாறு புரிந்து கொண்டால், உண்மையாகப் புரிந்து கொண்டால், அதன் விளைவு-த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி-"அவர் தனது தற்போதைய உடலை விட்ட பிறகு, வேறொரு ஜடவுடலை எடுப்பதில்லை." என்று கிருஷ்ணர் கூறுகிறார். மாம் ஏதி, அவர் தன்னிடம் வருவதாகக் கூறுகிறார். அதுவே, வாழ்வின் வெற்றி. நீங்கள் குறைந்தபட்சம், கிருஷ்ணரின் தெய்வீக தோற்றத்தையும் செயல்களையும் புரிந்துகொள்ள முயற்சித்தால் போதும், உங்கள் வாழ்க்கை வெற்றியடையும்.
இன்பத்திற்காகப் போராடுவதே ஜட வாழ்வு
கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம், மக்களுக்கு கிருஷ்ணரைப் பற்றி புரிய வைப்பதுதான். கிருஷ்ணரைப் புரிந்து கொண்டாலே ஜட வாழ்வின் சிக்கலிலிருந்து ஒருவர் விடுபடுவார். நாம் ஒவ்வொருவரும் கட்டுப்பாடுகளிலிருந்து வெளிவர முயற்சிக்கிறோம். “நான் ஒருசில சூழ்நிலைகளால் கட்டுண்டு இருக்கிறேன். இதிலிருந்து நான் வெளியேற வேண்டும்,” என்று நாம் ஒவ்வொருவரும் நினைக்கிறோம். இந்த பந்தத்தை முடிவிற்குக் கொண்டு வருதல், ஆத்யந்திக-து:க-நிவ்ருத்தி என்று அழைக்கப்படுகிறது. து:க நிவ்ருத்தி என்றால், துக்கமான சூழ்நிலைகளைத் தவிர்ப்பதாகும். ஒவ்வொருவருமே துன்பமான சூழ்நிலைகளைத் தவிர்க்க விரும்புகிறோம். துன்பத்தைத் தவிர்க்க நாம் போராடுகிறோம். அதுவே உண்மை . எனக்கு சுமாரான வருமானம், உதாரணமாக இரண்டாயிரம் ரூபாய் என்றால், அஃது எனக்குப் போதுமானது அல்ல. நான் பத்தாயிரம் ரூபாய் வேண்டிப் போராடுகிறேன், துன்பகரமான சூழ்நிலை விலகிவிடும் என்று எதிர்பார்க்கின்றேன். ஆனால், என்னிடம் பத்தாயிரம் ரூபாய் இருக்கும்போது, நான் மற்றொரு துன்பத்தை அனுபவிக்கின்றேன். அதன் பின், இருபதாயிரம் ரூபாய்க்கு முயற்சிக்கிறேன். இவ்வாறு நான் என் வருமானத்தை பெருக்கிக் கொண்டே செல்கிறேன். ஆனால் அந்த துன்பகரமான சூழ்நிலையோ ஒருபோதும் குறைந்தபாடில்லை. பணத்தினால் துன்பம் குறைந்துவிடும் என்றால். கோடீஸ்வரர்கள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? அவர்களிடம் பணம் உள்ளது. ஆனால் பணத்தினால் அடையப்படும் பௌதிக வசதிகள் அவர்களை சந்தோஷப்படுத்த முடியாது என்பதை அவர்கள் அறிவதில்லை.
இந்தியா ஓர் ஏழை நாடாக விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் மற்ற இடங்களுடன் ஒப்பிடும்போது, இந்தியாவிலுள்ள பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனர். பௌதிக மாகப் பார்த்தால், இந்தியர்களிடம், குறிப்பாக கிராமவாசிகளிடம் உடுத்து வதற்கு இரண்டு துணிகளைத் தவிர மற்ற உடமைகள் இல்லை. ஆயினும் அவர்கள் வதக் கொள்கைகளைப் பின்பற்று கின்றனர்; அதிகாலையில் குளித்து தங்கள் தொழிலுக்குச் செல்கின்றனர்; கிடைப்பதை உண்டு அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அவர்களை ஆதிகால மனிதர்கள் என்று தற்கால மக்கள் கூறுகின்றனர். ஆனால் தற்கால மக்கள் முன்னேறியவர்களா என்ன? முன்னேறிய நாகரிகம் என்றால், அவன் ஏன் தற்கொலை செய்து கொள்கின்றான்?
உண்மையான மகிழ்ச்சி
உண்மையான மகிழ்ச்சி என்றால் என்ன என்பதை மக்கள் அறியாமல் இருப்பதாலேயே இப்போராட்டம் தொடர் கிறது. ந தே விது: ஸ்வார்த்த கதிம் ஹி விஷ்ணும், (ஸ்ரீமத் பாகவதம் 7.5.31) உண்மையான மகிழ்ச்சி விஷ்ணுவிடம் உள்ளது என்பதை மூடர்கள் அறியார்கள். கிருஷ்ணரது மகிழ்ச்சியே எமது மகிழ்ச்சி, கிருஷ்ணருக்காக நாங்கள் இரவுபகலாக உழைக்கிறோம். பக்தர் அல்லாதவர்களான கர்மிகளும்கூட இரவுபகலாக உழைக்கின்றனர், ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை . நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம். அஃது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் செய்யும் அதே செயல்களையே நாங்களும் செய்கிறோம். நாங்கள் சோம்பேறியாக இருப்பதில்லை. தூங்கிக் கொண்டிருப்பதில்லை. நாங்கள் ஒவ்வொருவரும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளோம்: ஒருவர் எழுதுகிறார், ஒருவர் அதனை டைப் செய்கின்றார், வேறொருவர் புத்தகங்களை விநியோகம் செய்கிறார், மற்றவர் பிரசாதம் சமைக்கிறார். ஒருவர் சுத்தம் செய்கிறார். ஒருவர் சங்கீர்த்தனம் செய்கிறார். ஒரு க்ஷணம்கூட நாங்கள் சோம்பேறியாக இருப்பதில்லை. நாங்கள் கிருஷ்ணருக்காக உழைப்பதால், அந்த உழைப்பு எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இங்கு யாருக்கும் காலணா கூட சம்பளம் கொடுக்கப்படுவதில்லைசரியாகச் சொன்னால் ஒவ்வொருவரும் பணத்தைக் கொண்டு வருகின்றனர்இருப்பினும், ஒவ்வொருவரும் மகிழ்ச்சி யாக உள்ளோம். கர்மிகளோ பணம் சம்பாதிக்கும்போதிலும், சந்தோஷமாக இல்லை. இது நடைமுறையில் நாம் காணக்கூடிய ஒன்றாகும்.
சில நேரங்களில், எங்களுடன் இருப்பவரை, சில காரணங்களுக்காக “இங்கு நீங்கள் தங்க முடியாது என்று கூறி வெளியில் அனுப்பிவிடுகிறோம். ஆனால், கிருஷ்ண உணர்வின் மகிழ்ச்சியை அவர் அனுபவித்திருப்பதால், அவரால் வெளியில் தங்க இயலாது. மகிழ்ச்சி இல்லையெனில், ஏன் இவர்கள் எங்களுடன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்? இங்கிருந்து வெளியில் சென்று மீண்டும் நம்மிடம் திரும்பி வந்தவர்கள் வெளியில் எந்த சந்தோஷத்தையும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. மக்கள் சொல்லலாம்: “அவர்கள் முட்டாள்கள், ஏதோ ஒரு எண்ணத்துடன் செயல்பட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் கிருஷ்ண உணர்வில் இருப்பவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்கள் கண்டிப்பாக சந்தோஷமாக இருக்க வேண்டும், மற்றவர்கள் இதனை உணர்வதில்லை. ந தே விது:ஸ்வார்த்த கதிம் ஹி விஷ்ணும், மகிழ்ச்சியடைவது எவ்வாறு என்பதை பக்தர் அல்லாதோர் அறிவதில்லை.
நீங்கள் கடவுளின் அம்சம் என்பதால், கடவுளிடம் வரும்போது மட்டுமே மகிழ்ச்சியடைய முடியும். உதாரணமாக, ஒரு சிறு குழந்தை அழும்போது, அவனை சாந்தப்படுத்த யாராலும் முடியாது. ஆனால் தாயின் மடியை அடைந்தவுடன் அவன் மகிழ்ச்சியடைகிறான். குழந்தை யானவன் தாயின் ஓர் அம்சம் என்பதால், அவன் இதனை உடனே அறிகின்றான்: “என் அன்னையிடம் நான் பாதுகாப்பில் உள்ளேன்.” அதுபோலவே, நாம் அனைவரும் கடவுள் விஷ்ணுவின் அம்சங்கள். எனவே, நாம் கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவிடம் வந்தாலொழிய மகிழ்ச்சியடைய முடியாது. அது நடைமுறையில் சாத்தியமல்ல. ஆனால் ஜட மூடர்களுக்கு இது தெரியாது. அவர்கள் விஞ்ஞான முன்னேற்றம் என்ற பெயரில் னேற்றம் என்ற பெயரில் மகிழ்ச்சியடைய முயல்கின்றனர்.
துன்பமற்ற தளம்
மகிழ்ச்சி என்னும் தளத்திற்கு வருவதே வாழ்வின் குறிக்கோள். அங்கு துன்பங்கள் ஏதுமில்லை. சந்தோஷம் மட்டுமே. ஆனந்தமயோ (அ)ப்யாஸாத் அதுவே எங்கள் குறிக்கோள். நீங்கள் கிருஷ்ணருடைய பல படங்களைப் பார்த்திருப்பீர்கள்: கிருஷ்ணர், மாடு மேய்க்கும் சிறுவர்களுடன் விளை யாடுகிறார். தோழியருடன் நடன மாடுகிறார். வெண்ணை திருடுகிறார், இன்னும் பற்பல செயல்களில் ஈடுபடு கிறார். அவையனைத்தும் ஆனந்தத்துடன் செய்யப்படுகின்றன. கிருஷ்ணரை வருத்தம் தோய்ந்த முகத்துடனோ, உட்கார்ந்து அழுவது போன்றோ நாம் காண முடியாது. ஓர் அசுரனைக் கொல்லும்போதுகூட சிரித்துக் கொண்டே, சுலபமான வேலையை செய்வது போன்று செய்கிறார். அவர் கொல்கிறாரா நடனம் ஆடுகிறாரா என்று நினைக்கத் தோன்றுகிறது. அவர் எப்போதும் ஆனந்தமாக இருக்கிறார்.
மிகவுயர்ந்த ஆனந்தத்தைப் பற்றிய செய்தியை நாங்கள் ஆனந்தத்துடன் அளிக்கின்றோம். அனந்த மயோ (அ)ப்யாஸாத், என்று வேதாந்த சூத்திரம் (1.1.12) கூறுகிறது. “தனி ஆத்மா மற்றும் பரமாத்மாவின் இயல்பு ஆனந்தமாக இருப்பதுவே.” ஆன்மீக வாழ்க்கை என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி. அந்த ஆனந்தத்தினை உயர் அதிகாரியுடன் ஒத்துழைப்பதன் மூலமே அடைய முடியும்.
நாம் நெருப்பின் பொறியைப் போன்றவர்கள். சில சமயத்தில் இப்பொறிகள் அழகாகத் தோன்றுகின்றன. ஆனால் இவை நெருப்பிலிருந்து கீழே விழும்பொழுது அவற்றின் உக்கிரத்தன்மை உடனடியாக அணைக்கப்பட்டு விடுகிறது. நம்முடைய வாழ்வும் அதுபோன்றதே. கிருஷ்ணரின் சகவாசத்தை விட்டுவிட்டு, நாம் இந்த ஜடவுலகில் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினோம்; அதனால் நாம் துறை துன்பப்படுகிறோம்.துறை இந்த பொறியை, இந்த கார்பன் துகளை, நீங்கள் மீண்டும் நெருப்பில் இட்டால், அது மீண்டும் நெருப்பாக கனக்கும், செந்நிற கொழுந்தாக மாறும். இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில், அவ்வாறு நெருப்பிலிருந்து வீழ்ந்த பொறிகளைத் தேர்ந்தெடுத்து மீண்டும் அவற்றை நெருப்பிலிட நாங்கள் முயற்சிக்கிறோம். அந்த நெருப்பிடம் திரும்பிச் செல்வதே ஆனந்தம்.
கடவுளுக்குரிய பரிசோதனை
இந்த ஸ்லோகத்தில் ராம க்ருஷ்ணாவ் இதி என்று சொல்லப் பட்டுள்ளது. கடவுள் பலராமராகவும் கிருஷ்ணராகவும் தோன்றினார். இதுபோன்ற பெயர் கொண்ட போலிகளால் சில முட்டாள் மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். அத்தகு அயோக்கியர்கள், தங்களையே இராமராகவும் கிருஷ்ணராகவும் பிரகடனப்படுத்துகின்றனர். அயோக்கிய மக்களும் அவர்களை நம்புகின்றனர். கடவுளுக்கென்று சில அறிகுறிகள் இருக்க வேண்டும். அதற்கு என்ன சோதனை? பகவான் அஹரத் பரம், இதுவே சோதனை. கடவுள் இந்த பூமி பாரத்தை நீக்க முடியும். கிருஷ்ணரும் பலராமரும் தோன்றியபோது, பலராமர் இந்த உலகம் அமைதியாக இருப்பதற்காக பல அசுரர்களைக் கொன்றார். பிறந்ததில் இருந்தே, கிருஷ்ணர், பூதனா, அகாசுரன், பகாசுரன், கேசி, மற்றும் பல அசுரர்களைக் கொன்றார். ஒவ்வொரு நாளும் கிருஷ்ணரும் பலராமரும் காட்டிற்குச் செல்வது வழக்கம். அப்போது யாராவது ஓர் அசுரன் அவர்களைத் தொந்தரவு செய்வான், கிருஷ்ணர் அவனைக் கொன்று விடுவார். கிருஷ்ணருடைய நண்பர்கள் வீட்டிற்கு வந்து நடந்த கதையை தங்களது தாயிடம் விவரிப்பர்: “அம்மா, கிருஷ்ணர் மிகவும் அற்புதமானவர், அவ்வளவு பெரிய அரக்கன் வந்தான், கிருஷ்ணர் இப்படியும் அப்படியுமாக அவனைக் கொன்றுவிட்டார். அவரே கிருஷ்ணர். இத்தகு அற்புத செயல்களைச் செய்யாமல், ஏதோ தியானம் செய்கிறார். அவர் கிருஷ்ணராக மாறுகிறார் என்று கூறக் கூடாது. ஒருவர் கிருஷ்ணர் அல்லது இராமர் என்பதற்கு என்ன சோதனை? மூடர்கள் பிரமாணத்தை எடுத்துக் கொள்வதில்லை. அவர்கள் வெறுமனே ஓர் ஏமாற்று நடிகனை கிருஷ்ணர் அல்லது இராமர் என்று கருதிவிடுகின்றனர்.
பலராமரும் கிருஷ்ணரும் சாக்ஷாத் பகவானே. தங்களை முழுமுதற் கடவுளாக அவர்கள் நிரூபித்துள்ளனர். அவர்கள் புற்றுநோயினால் கொல்லப்படக்கூடிய "இராம-கிருஷ்ணர்” அல்ல. அத்தகு இராம-கிருஷ்ணரை நாங்கள் பின்பற்ற விரும்பவில்லை. உண்மையான இராமகிருஷ்ணர் இருக்கையில், போலியான இராம-கிருஷ்ணரிடம் நான் ஏன் செல்ல வேண்டும்? அதே கடவுள் என்று சிலர் கூறலாம். ஆனால் நான் ஏன் நம்ப வேண்டும்? அதே நபர் என்பதற்கான சான்றுகள் எங்கே?
நாம் ஏமாற்றப்படுவதில் இருந்து தப்புவதற்கு புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். க்ருஷ்ண ஏய் பஜே சேய் பத சதுர, புத்திசாலியாக இல்லாத பட்சத்தில் கிருஷ்ணரிடம் யாரும் சரணடைய முடியாது. பகவத் கீதையின் (7.19) படி,
பஹூனாம் ஜன்மனாம் அந்தே
க்ஞானவான் மாம் ப்ரபத்யதே
வாஸுதேவ: ஸர்வம் இதி
ஸ மஹாத்மா ஸுதுர்லப:
"பற்பல பிறவிகளைக் கடந்த பிறகு, யாரொருவன் புத்திசாலியோ, அவன் எல்லா காரணங்களுக்கும் காரணமாக என்னை (கிருஷ்ணரை) அறிந்து சரண டைகிறான்."
நாம் ஏமாற்றப்பட மாட்டோம்
ஒவ்வொருவரும் கிருஷ்ணருக்குப் போட்டியாக யாரேனும் ஒருவரை முன்நிறுத்த முயல்கின்றனர். “ஓ, ஏன் அந்த கிருஷ்ணர்? இங்கு பார்! இன்னொரு கிருஷ்ணர் இருக்கிறார். பெரிய தாடி யுடன்.” இதுபோன்ற கிருஷ்ணர் முட்டாள் களுக்குரியவர், அத்தகு கிருஷ்ணரை முன்நிறுத்துபவர்களும் முட்டாள்களே.
பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் (7.16) கூறுகிறார்:
சதுர்-விதா பஜந்தே மாம்
ஜனா: ஸுக்ருதினோ (அர்ஜுன
ஆர்தோ ஜிக்ஞாஸுர் அர்தார்தீ
க்ஞானி ச பரதர்ஷப
துன்பத்தில் இருப்போர், செல்வம் வேண்டுவோர், கேள்வியுடையோர். புத்திசாலிகள் ஆகிய நான்குவிதமான மனிதர்கள் நல்லோர்களாக இருக்கும் பட்சத்தில் கடவுளிடம் வருகின்றனர். ஒரு சாதாரண மனிதன் நல்லவனாக இருந்தால், அவன் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறான்: “எம்பெருமானே! நான் துன்பத்தில் இருக்கிறேன். தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள்.” அல்லது யாரேனும் ஒருவருக்கு செல்வம் தேவைப்பட்டால் அவரும் கடவுளை அணுகுகிறார்: "என் பிரியமான பெருமாளே! பணத் தேவையால் நான் துன்பப்படுகிறேன். தயவுசெய்து சிறிது செல்வத்தைத் தாருங்கள். ஞானிகள் ஞானத்தை அடைவதற்காக கடவுளை அணுகு கின்றனர். "கடவுளின் நிலை என்ன? கடவுள் என்றால் யார்?” என்று கேள்வியுடையோர் விசாரணை செய்கின்றனர்.
இந்த நான்கு பிரிவினரும் கடவுளைப் புரிந்துகொள்ளவோ அணுகவோ முயல்கின்றனர். இந்த நான்கில், துன்பத்தில் உள்ளோரும் செல்வத்திற்கான தேவை உள்ளோரும், தான் முடிவிற்கு வந்தவுடன், அல்லது செல்வத்திற்கான தேவை பூர்த்தி செய்யப்பட்டவுடன், கடவுளை மறந்து விடுகின்றனர். ஆனால் கேள்வியுடையவர்களும் ஞானிகளும் தொடர்ந்து கடவுளைத் தேட முயல்கின்றனர். இந்த இரு வகுப்பினரில், கடவுள் என்றால் என்ன என்பதை புரிந்துகொள்பவன்முழுமையடைகிறான். இது பற்பல பிறவிகளுக்குப் பிறகே சாத்தியப்படுகிறது. பற்பல பிறவிகளுக்குப் பின் ஒருவர் எந்த விதமான அறிவைப் பெறுகிறார்? வாஸுதேவ: ஸர்வம் இதி, வாசுதேவரான கிருஷ்ணரே எல்லாம் என்ற அறிவை அவர் பெறுகிறார். கிருஷ்ணரே எல்லாம் என்று ஒப்புக் கொள்பவர் மிகவும் அரிதானவர், அவரே மகாத்மா. அத்தகு மகாத்மாக்களை போலி கிருஷ்ணர்கள் தவறான வழிக்கு அழைத்துச் செல்ல முடியாது. அவர்கள் உண்மையான கிருஷ்ணரிடம் நம்பிக்கையுடையவர்களாக இருக்கின் றனர். கிருஷ்ணர் விருஷ்ணி குலத்தில் அவதரித்தார், நம்முடைய வேலை கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதே. கிருஷ்ணரை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. அவர் அளவிட முடியா தவர், இருப்பினும் மாபெரும் பக்தர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதன் மூலம், நாம் கிருஷ்ணர் யார் என்பதை ஓரளவிற்குப் புரிந்து கொள்ளலாம்.
நமது உண்மையான நோக்கம், கிருஷ்ணரை நேசிப்பதாகும், கிருஷ் ணரின் இடையர் குலத் தோழிகளான கோபியர்களுக்கு, கிருஷ்ணர் கடவுள் என்பது தெரியாது. அவரது இடையர் குலச் சிறுவர்களுக்கும் தெரியாது. சொல்லப் போனால் அன்னை யசோதைக்கும் கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்பது தெரியாது. அவர்கள் கிருஷ்ணரிடம் காட்டிய அன்பு இயல்பானது, கிருஷ்ணரைத் தவிர வேறெதையும் அவர்கள் அறியார்கள். அந்த நிலைக்கு நீங்கள் வந்தால் அதுவே பக்குவம்.
நாம் கடவுளைப் பற்றி தெரிந்து கொள்ள முடியுமா? நமக்கு என்ன தெரியும்? கடவுளைத் தெரிந்து கொள்ளும் அளவிற்கு நம்மிடம் அறிவுள்ளதா? ஆனால் நாம் கடவுளை அவரது செயல்களின் மூலம் காணலாம். கிருஷ்ணர் தோன்றிய போது, அவரது செயல்கள் அனைத்தும் அசாதாரணமானவையாக இருந்தன. அவர் மானிடர் அல்ல. ஆனால் ஒரு மனிதரைப் போல் நடித்தார். மனிதர்கள் திருமணம் செய்கின்றனர், கிருஷ்ணரும் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரது திருமணம் ஆச்சரியமானது, அவர் 16,108 பெண்களை மணம் முடித்தார். அஃது அசாதாரணமானது. யாராலும் அவ்வாறு திருமணம் செய்ய இயலாது. இஸ்லாமிய நவாப்கள் பல பெண்களை மணம் முடிப்பதுண்டு. ஒரு நவாப் 160 பெண்களை மணம் செய்து கொண்டார். ஆனால் அவரால் எல்லா மனைவியரையும் ஒரே சமயத்தில் அணுக இயலவில்லை . அது நடைமுறையில் சாத்தியமற்றது. ஆனால் கிருஷ்ணர் அவ்வாறல்ல. அவர் தன்னை 16,108 உருவங்களாக விரிவாக்கம் செய்து, ஒவ்வொரு மனைவியையும் திருப்தி செய்தார்.
இவ்வாறாக, கிருஷ்ண பலராம அவதாரங்களைப் பற்றிய வர்ணனைகள் ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. அவர்களின் அறிகுறிகள். தாய் தந்தையரின் பெயர், இடம், செயல்கள் என எல்லாமே விவரிக்கப்படுகின்றன. பொய்யான அவதாரங்களால் நாங்கள் ஏமாற்றப்படமாட்டோம். அது சாத்தியமல்ல. யார் எமாற்றப்பட விரும்புகிறார்களோ அவர்களே ஏமாற்றப்படுவர். ஆனால் நாங்கள் ஏமாற்றப்பட விரும்பவில்லை. மட்டுமே எங்களுக்கு வேண்டும். எனவே, யாரும் எங்களை ஏமாற்ற முடியாது.
மிக்க நன்றி. (தமிழாக்கம்: ஜெயகோவிந்தராம தாஸ்)