குருக்ஷேத்திரம் அனைவரும் அறிவேண்டிய “தர்மத்தின் விளைநிலம்"
புதுதில்லியிலிருந்து சுமார் நூறு மைல் தொலைவில் அமைந்துள்ள குருக்ஷேத்திரம் என்னும் இடத்தில்தான் மஹாபாரதப் போர் நடந்தது என்பதும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையை உபதேசித்தார் என்பதும் யாவரும் அறிந்ததே. ஆனால் அதற்கும் முன்பே, புராதன இந்தியாவின் வரலாற்றிலும் பண்பாட் டிலும் குருக்ஷேத்திரம் ஒரு முக்கிய பங்கை வகித்துள்ளது.
குருக்ஷேத்திரத்தின் முக்கியத்துவம் பல வேத இலக்கியங்களில், குறிப்பாக பகவத் கீதை, மஹாபாரதம், புராணங்கள் மற்றும் உபநிஷத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அது தேவர்களுடைய இருப்பிடமாகவும், தவத்திற்கு உகந்த இடமாகவும் விவரிக்கப்பட்டுள்ளது.
குருக்ஷேத்திரத்தின் சூழ்நிலை தற்பொழுதும் வேத மந்திரங்களால், முக்கியமாக, பகவத் கீதையினால்நிரம்பியுள்ளது. பகவத் கீதையின் முதல் ஸ்லோகம் குருக்ஷேத்திரத்தை தர்மக்ஷேத்திரமாக அதாவது “தர்மத்தின் விளைநிலமாக” சுட்டிக்காட்டுவதிலிருந்து கீதை பிறப்பதற்கு முன்பே அஃது ஒரு புனிதத் தலம் என்பதை நாம் அறியலாம்.
ஹரியானா மாநிலத்தில், புண்ணிய நதிகளான சரஸ்வதிக்கும் திருஷாத்வதிக்கும் இடையில் நூறு சதுர மைல் பரப்பளவு கொண்ட குருக்ஷேத்திரத்தில், இன்று பல புராதன கோவில்களையும், புனித குளங்களையும் காண முடியும்.
மாமன்னன் குரு
குருக்ஷேத்திரம் முன்னாளில் பிரம்ம க்ஷேத்திரம், பிருகுக்ஷேத்திரம், ஆரிய வர்த்தம் மற்றும் ஸமந்த பஞ்சகம் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் “குரு” என்ற மன்னனின் செயல்களால் அதற்கு “குருக்ஷேத்திரம்” என்ற பெயர் ஏற்பட்டது.
பாண்டவர்களின் பிரசித்திபெற்ற மூதாதையரான மன்னன் குரு எவ்வாறு இவ்விடத்தை ஆன்மீகப் பண்பாட்டின் மிகச்சிறந்த மையமாக திகழச் செய்தார் என்பதை மஹாபாரதம் கூறுகிறது. மன்னன் குரு ஒரு தங்கத் தேரில் இவ்விடத்தை அடைந்து, தேரின் தங்கத்தைக் கொண்டு ஒரு கலப்பையை செய்தார். பிறகு சிவபெருமானின் எருதையும், எமராஜனின்எருமையையும் கடனாகப் பெற்று நிலத்தை உழத் தொடங்கினார்.
அப்பொழுது அங்கு வந்த இந்திரன், குருவிடம் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என வினவிய போது உண்மை , யோகம், இரக்கம், தூய்மை, கொடை, மன்னிப்பு, தவம் மற்றும் பிரம்மசரியம் போன்ற எட்டு சீரிய மதக்கொள்கைகளை வளர்க்க நிலத்தை தயார் செய்து கொண்டிருப்பதாக மன்னன் கூறினார்.
இந்திரன் மகிழ்ந்து மன்னனிடம் ஒரு வரத்தைப் பெற்றுக்கொள்ளும்படி கூறினான். மன்னனும், அவ்விடம் தன் பெயரால் வழங்கப்பட்டு புனித தலமாக திகழவேண்டும் என்றும்,அவ்விடத்தில் இறப்பவர்கள் (பாவ புண்ணியங்கள் எப்படியிருந்தாலும்) ஸ்வர்க லோகம் செல்ல வேண்டும் என்றும் வரத்தைக் கேட்டார். இந்திரன் அவரது கோரிக்கைகளை நிறைவேற்ற தயங்கினார். மன்னனும் தளர்ச்சியடையாமல் கடும் தவங்களைப் புரிய, கொஞ்சம்கொஞ்சமாக இந்திரனின் மனம் மாறியது. ஆனால், யாகங்கள் செய்யாமல் வெறுமனே அங்கு மரணமடைவதால் மட்டும் ஒருவன் ஸ்வர்கத்திற்கு ஏற்றம் பெற இயலாது என மற்ற தேவர்கள் ஆட்சேபித்தனர்.
இறுதியில் குருவிற்கும் இந்திரனுக்கும் இடையில் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி, அவ்விடத்தில் போரினாலோ தவத்தினாலோ எவரேனும் மடிந்தால், இந்திரன் அவர்களை ஸ்வர்கத்திற்குள் அனுமதிப்பான் என்பதே. ஆகையால் குருக்ஷேத்திரம் புண்ணியஸ்தலமாகவும், போர் புரிய ஏற்ற இடமாகவும் ஆனது.
மஹாபாரதப் போர்
பாண்டவர்கள் தங்கள் உரிமையை திருதராஷ்டிரரிடமும் அவரது மகன்களான கௌரவர்களிடமும் கேட்ட போது, குரு நிலத்தின்தென்பகுதியில் இருந்தகாண்டவ வனம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அங்கு அவர்கள் இந்திரபிரஸ்தம் என்ற அற்புத நகரினை உருவாக்கினர். தற்போது அந்த இடத்தில் டில்லி அமைந்துள்ளது. கௌரவர்கள் வடகிழக்கில் உள்ள ஹஸ்தினாபுரத்தை தலைநகராக கொண்டனர். பின்னர் யுதிஷ்டிரர் பகடை ஆட்டத்தில் தோற்கடிக்கப்பட்டதால் பாண்டவர்கள் பதிமூன்று ஆண்டுகள் வனவாசத்திற்கு உட்படுத்தப்பட்டனர்.
வனவாசம் முடிந்த பின் பாண்ட வர்கள் தங்கள் இராஜ்ஜியத்தை திரும்பக் கேட்டனர். துரியோதனன் மறுக்க அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர், துரியோதனனிடம் ஐந்து கிராமங்களை அவர்களுக்காக மன்றாடினார். ஆனால் துரியோதனன் "பாண்டவர்களுக்கு ஊசிமுனை அளவு இடம்கூட கிடையாது” என மறுத்து விட்டான்.
எனவே, போர் தவிர்க்க முடியாத தாயிற்று. பாண்டவர்களும் கௌரவர்களும் குருக்ஷேத்திரத்தில் போரிட முடிவு செய்தனர். ஏனென்றால் அந்த இடம் பரந்தது, தனிமையானது. நீர் நிறைந்தது, மற்றும் விறகுகளும் மிகுந்தது. பதினெட்டு நாட்கள் நடந்த யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றிவாகை சூடினர்.
பகவத் கீதையின் தோற்றம்
குருக்ஷே த்திரப் போர் மோக்ஷத ஏகாதசி நாளன்று துவங்கியது. அன்றுதான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்தார். ஒவ்வொரு வருடமும் அந்நாள், பகவத் கீதை தோன்றிய நாளாக, குருக்ஷேத்திரத்திலும் பாரதத்தின் பல பாகங்களிலும் கொண்டாடப்படுகிறது. கீதை பேசப்பட்ட இடமான ஜோதிஸரில் இது மிகப்பெரிய விழாவாகக் கொண்டா டப்படுகிறது. இச்சமயத்தில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (இஸ்கானின்) பக்தர்கள், பிரபுபாதர் புத்தக மாரதான் (தொடர் விநியோகம்) என்னும் பெயரில் வருடந்தோறும் பிரபுபாதரின் புத்தகங்களை பெருமளவில் விநியோகிக்கின்றனர். குறிப்பாக, “பகவத் கீதை உண்மையுருவில்" என்னும் புத்தகத்தினை இலட்சக்கணக்கில் இந்தியா விலும் உலகின் மற்ற பாகங்களிலும் விநியோகிக்கின்றனர்.
பூரி ஜகன்னாதர் ரதயாத்திரையில் குருக்ஷேத்திரத்தின் பங்கு
ஒருமுறை கிருஷ்ணர், சூரிய கிரகணத்தின் போது, குருக்ஷேத்திரம் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார்.விருந்தாவனத்தில் உள்ள கோபர்களையும் கோபியரையும் தன்னை குருக்ஷேத்திரத்தில் சந்திக்குமாறு அழைப்பு விடுத்தார். இளமையில் (பதினொரு வயதில்) விருந்தாவனத்தை விட்டு மதுரா செல்லும்போது, அவர் விரைவில் திரும்புவதாக வாக்களித்திருந்தார். ஆனால் நீண்ட காலமாகியும், அவர் விருந்தாவனம் திரும்பவில்லை . எனவே, பிரிவினால் ஏற்பட்ட பரவச உணர்வில், அவர் மீதுள்ள ஆழ்ந்த பாசத்தால், அவரை மறுபடியும் காண விருந்தாவனவாசிகள் துடித்துக் கொண்டிருந்தனர்.
செல்வச்செழிப்பு மிக்க துவாரகை நகரவாசிகள் தங்கள் ரதங்களிலும், பசுக்களை பராமரிக்கும் விருந்தாவன கிராமவாசிகள் தங்கள் மாட்டு வண்டிகளிலும் குருக்ஷேத்திரத்தை அடைந்தனர். விருந்தாவனவாசிகளும் துவாரகாவாசிகளும் உறவினர்கள் என்பதால், அச்சந்திப்பு மகிழ்ச்சிகரமாக நடைபெற்றது. விருந்தாவனவாசிகளில் முதன்மை கோபியான ஸ்ரீமதி ராதா ராணியே அனைவரையும் விட கிருஷ்ணரைப் பிரிந்த பிரிவுத்துயரில் மிகவும் ஆழ்ந்திருந்தார். அவரும் மற்ற கோபியரும் கிருஷ்ணரை மீண்டும் விருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்வதில் உறுதியாக இருந்தனர். அப்போது அவர்களுக்கிடையில் நடந்த உன்னத அன்புப் பரிமாற்றமே பூரி ரதயாத்திரையின் பின்னணியாகும். ஹரே கிருஷ்ண பக்தர்கள், உலகின் பல நகரங்களில் ரதயாத்திரைகளை நடத்தும் போது, அவர்கள் குருக்ஷேத்திரத்தின் பெருமையை எடுத்துரைக்கின்றனர்.
குருக்ஷேத்திரத்தில் உள்ள புனித ஸ்தலங்கள்
இவ்விடத்தில் ஒன்பது புண்ணிய நதிகளும் ஒன்பது புனித வனங்களும் உள்ளன என்று வாமன புராணம் கூறுகிறது.
சரஸ்வதி நதி
குருக்ஷேத்திரத்தில் சரஸ்வதி நதியைத் தவிர மற்ற நதிகளின் ஆற்றுப்படுகைகளை காண்பது அரிது. சரஸ்வதி நதி மழை காலங்களில் பாய்ந்தோடுகிறது, ஆனால் மற்ற நேரங்களில் அதன் ஆற்றுப் படுகையை மட்டுமே ஒருவர் காணலாம்.
ஜோதிஸர்
ஜோதிஸரில் ஓர் ஆலமரத்தின் அடியில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையை உபதேசித்த இடத்தில், பளிங்கினாலான தேர் அமைக்கப்பட்டுள்ளது. அம்மரம் ஐயாயிரம் வருடங்கள் பழமையானது. அதுவே அர்ஜுனனுடன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நடத்திய அழிவற்ற உரையாடலுக்கு மிகப் பழமையான அத்தாட்சியாகும். குருக்ஷேத்திரத்திலிருந்து ஐந்து மைல் தொலைவில் சரஸ்வதி நதியின் கரையில் ஜோதிஸர் அமைந்துள்ளது.
பிரம்ம ஸரோவர்
பிரம்மா இங்குதான் பூமியை படைத்ததாகக் கூறப்படுகிறது. சூரிய கிரஹணத்தின்போது ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் பிரம்ம ஸரோவரில் (குளத்தில்) புனித நீராட தொன்றுதொட்டு வருகின்றனர். இந்த அழகிய பிரம்ம ஸரோவர் அவ்விடத்திலுள்ள மற்ற குளங்களைக் காட்டிலும் பெரியது. குருக்ஷேத்திரத்திற்கு வரும்பயணிகளுக்கு அது முக்கிய இடமாக உள்ளது.
பிரம்ம ஸரோவரின் வடகரையில் இஸ்கான் ஸ்தாபக ஆச்சாரியர் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரின் ஆன்மீக குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரால் ஸ்தாபிக்கப்பட்ட கெளடிய மடத்தின் ராதாகிருஷ்ணர் ஆலயம் அமைந்துள்ளது. ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு ராதையும் கிருஷ்ணரும் மீண்டும் ஒன்றுசேர்ந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் கௌடிய மடத்தினால் இக்கோவில் கட்டப்பட்டது.
சமந்த பஞ்சகம்
குருக்ஷேத்திரம் சமந்த பஞ்சகம் (ஐந்து நீர்நிலைகள்) என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், பகவான் கிருஷ்ணரின் அவதாரமான பரசுராமர் சத்திரியர்களைக் கொன்று அவர்களுடைய குருதியினால் ஐந்து நீர்நிலைகளை இங்கு உருவாக்கினார். (பரசுராமர் துஷ்ட அரசர்களையும், போர் வீரர்களையும் இருபத்தியோரு முறைகள் அழித்தார்.) குருதியானது பின்பு நீராக மாறியது என ஸ்ரீல பிரபுபாதர் கூறினார்.
பான கங்கை
பான கங்கை அல்லது பீஷ்ம குண்டம் எனப்படும் புனித ஸ்தலமானது குருக்ஷேத்திரத்திலிருந்து மூன்று மைல் தொலைவில் அமைந்துள்ளது. குருக்ஷேத்திரப் போரின் போதுபாண்டவர்களின் பாட்டனாரான பீஷ்ம தேவர் தன் உடலைத் துளைத்த அம்பு களில் படுத்திருந்தார். தனது தாகத்தை தணிக்கும்படி அர்ஜுனனிடம் அவர் கேட்டபோது, மாவீரரான பீஷ்மர் இகவுலக நீரை பருக விரும்பவில்லை என்பது அர்ஜுனனுக்குத் தெரிந்தது. எனவே, அர்ஜுனன் தனது அம்பைக் கொண்டு பூமியை துளையிட்டார். கங்கை நீரானது பீறிட்டது. அர்ஜுனனின் இந்த சிறந்த செயலுக்கு நன்றி கூறிய பீஷ்மர் அப்புனித நீரினைப் பருகினார். பின்னர் பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு தர்ம மார்க்கத்தைப் பற்றி போதித்தார். இங்கு யாத்திரிகர்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் விஸ்வரூப மூர்த்தியையும், இருபத்தாறு அடி உயரமுள்ள ஹனுமானையும் வழிபடலாம்.
பான கங்கை (தயல்பூர்)
இது பிரம்ம ஸரோவரிலிருந்து சில மைல்கள் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். இங்கு அர்ஜுனன் ஜயத்ரதனைக் கொல்வதற்காக போரிட்ட பொழுது தனது தேர் குதிரைகளுக்கு நீர்வழங்க அம்பினால் பூமியை துளையிட்டு கங்கையை வரவழைத்தார்.
கர்ணவதம்
கர்ணவதம் என்பது ஒரு நீண்ட பள்ளப் பகுதியாகும். இவ்விடத்தில்தான் கர்ணனுடைய தேர் சக்கரம், அர்ஜுனன் அவனை கொல்லும்முன், சிக்கிக் கொண்டது
பராசரர்
தானேஸ்வரிலிருந்து தெற்கில் இருபத்தைந்து மைல் தொலைவில் அமைந்துள்ள இவ்விடத்தில் ஸ்ரீல வியாச தேவரின் தந்தையான பராசர முனிவரின் ஆஸ்ரமம் அமைந்திருந்தது. மஹாபாரத போரின் இறுதியில் போர்க்களத்திலிருந்து ஓடிய துரியோதனன் இங்குள்ள ஏரியில் மறைந்திருந்தான். பாண்டவர்கள் சண்டையிட அவனிடம் சவால் விட்டபோது நீரிலிருந்து வெளிவந்தான்.
பேஹோவா
இது தானேஸ்வருக்கு மேற்கில் பதினேழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. முன்பு பிரிதுதக், (ப்ரிதுவின் குளம்) என அழைக்கப்பட்டது. கிருஷ்ணரின் சக்தி அவதாரமான மன்னர் பிருது, தனது தந்தையின் இறுதிச் சடங்குகளை இங்கே செய்தார். தினமும் நூற்றுக்கணக்கான யாத் திரிகர்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு சடங் குகள் செய்ய பேஹோ வாவிற்கு வருகின்றனர்.
சக்கர வியூகம்
தானேஸ்வரிலிருந்து எட்டு மைல் தொலைவில் அமைந்துள்ள சக்கர வியூகத்தில், படைத் தளபதிதுரோணாசாரியார் தனது இராணுவ படையை சக்கர வடிவில் அமைத்தார். இங்குதான் அர்ஜுனனுக்கும் சுபத்திரைக்கும் பிறந்த மகனான அபிமன்யு கொல்லப்பட்டான்.
குருக்ஷேத்திர புனித யாத்திரை செல்ல...
குருக்ஷேத்திரம் ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது. டில்லி யிலிருந்து நான்கு மணி நேரம் இரயில் பயணம் செய்து குருக்ஷேத்திரத்தை அடையலாம்.
குருக்ஷேத்திரம் செல்வோர் அங்குள்ள இஸ்கான் ஆலயத்திற்கும் செல்லுதல் நன்று.
பல தர்மசாலைகளும், நவீன வசதிகள் கொண்ட ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்களும் உள்ளன. மேலும் மும்பை, ஆக்ரா, பரோடா, சண்டிகர், சிம்லா போன்ற இடங்களிலிருந்து நேரடி இரயில்கள் இயக்கப்படுகின்றன.
தவத்திரு லோகநாத ஸ்வாமி அவர்கள் ஸ்ரீல பிரபுபாதரின் நேரடி சீடர். இஸ்கான் பக்தர்களுக்கு நன்கு பரிச்சயமான அவர், உலகெங்கிலும் பரவலாக பிரச்சாரம் செய்து கிருஷ்ண பக்தியை பரப்பி வருகிறார். (தமிழாக்கம்: விஜய வேங்கடேஷ தாஸ்)