பகவத்கீதையும் படிக்காத இந்துக்களும்

 பகவத்கீதையும் படிக்காத இந்துக்களும்


 பகவத் கீதை பிறந்து 5000 ஆண்டுகள் மேல் ஆகிறது.


இந்துக்களுக்கு  பகவத்கீதை புனித நூலாக கருதப்படுகிறது.


 உலகில் ஆராய்ந்தது பார்ப்போமானால் பகவத்கீதையை   இந்துக்கள் படித்ததை விட பிற மதத்தவர்கள் படித்தது அதிகம் என்று கூறலாம். காரணம் இந்துக்களில் பல பேர் இந்த பகவத் கீதை என்ற நூல் இருப்பது மட்டும்தான் தெரியும்.  பகவத் கீதையை படித்த இந்துக்கள் மிகவும் குறைவு 


ஏனென்றால் பகவத் கீதை  கடைசி காலத்தில் தான் படிக்க வேண்டும் என்றும், இளம் வயதில் படித்தாள் குடும்ப வாழ்க்கையில் பற்று இருக்காது என்றும் நம்பி வந்தனர். உண்மையில் பகவத் கீதை வாழ்க்கையைப் பற்றியும். வாழ்க்கையில் மனிதர்கள் தங்கள் பிரச்சனைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்றும், வாழ்க்கையில் ஏற்படும் உயர்வு தாழ்வுகளை எப்படி சமநிலைப்படுத்த வேண்டும் என்பதையும் தன்னுடைய உண்மையான கடமை என்ன என்பதைப்பற்றி,  அந்த கடமையை எப்படி தெளிவான முறையில் செயல்படுத்தி வாழ்வைக் கொடுத்து செல்ல வேண்டும் என்பதையும் விரிவாக சொல்லித் தருகின்ற ஒரு ஆன்மிக அறிவியல் நூல்.


 ஒவ்வொரு மனிதனுக்கும் பகவத் கீதை உயர்ந்த நண்பனும்  வழிகாட்டும் ஆசிரியரும் ஆகும். அதற்காக பகவத்கீதையை சாதாரண நண்பனாகவும் ஆசிரியராகவோ கருதிவிடக்கூடாது,  அனைவரும் அடையவேண்டிய வாழ்க்கையின் இறுதி குறிக்கோளும் இறைவனும் ஆன கிருஷ்ணரே குருவாகவும் நண்பராகவும் இருந்து போதிப்பதனால் வாழ்க்கையில் இதை விட உயர்ந்த வழிகாட்டுதல்  வேறு எதுவாகவும் இருக்க முடியாது.


 உண்மையில் பகவத் கீதை இந்துக்களுக்கு மட்டுமான புனிதநூல் கிடையாது. இந்த பகவத் கீதை மனிதகுலத்திற்கு  வாழ்க்கையின் நோக்கத்தை புரிய வைக்கக் கூடிய ஒரு புனித நூல் என்றே கூறவேண்டும். கீதை காட்டும் யோக முறைகளை இன்றும் நடை முறையில் பின்பற்ற முடியும், அவை மனிதனைப் பண்படுத்தக்கூடியவை. மேலும், இக்கால வாழ்வின் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் கீதையில் தெளிவான தீர்வு உள்ளது. 


காந்திமகான் கீதையைப் பற்றி


காந்தியடிகள், “சந்தேகங்கள் என்னை சூழும்போதும், ஏமாற்றங்கள் என் முகத்தை உற்று நோக்கும்போதும், உடனே கீதையைப் புரட்டி என்னை சாந்தப்படுத்தும் ஒரு ஸ்லோகத்தைக் காண்பதுண்டு. உடனே துன்பங்களுக்கு மத்தியிலும் புன்னகைக்கத் தொடங்கு வேன். கீதையை தீவிரமாக சிந்திப்பவர்கள் தினந்தோறும் புத்தம் புது மகிழ்ச்சியையும், புது அர்த்தங்களையும் பெறுவர்” என்று கூறியுள்ளார். கீதையானது அன்றும் இன்றும் என்றும் எல்லாருக்கும் வழிகாட்டும் வாழ்க்கை நூலாகும். வயதானவர்களுக்கு மட்டுமா? ஆன்மீகம் என்றாலே அறுபது வயதுக்கு மேல் என்று தள்ளிப்போடும் மக்கள், பகவத் கீதையை இளம் வயதில் படிப்பதை தவிர்க்கின்றனர். ஆனால், அடுத்த கணம் நாம் இருப்போமா என்பதை யாராலும் உறுதியளிக்க முடியாத நிலையில், மறுவாழ்விற்கு வளமூட்டும் பகவத் கீதையை, வயதான பிறகு படிக்கலாம் என்றுத் தள்ளிப் போடுவது முழு பைத்தியகாரத்தனம் அல்லவா! 


ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது என்பதற்கேற்ப. இளம்வயதில் கீதையை படிக்கும் தெளிவு முதுமையில் கிட்டுமா என்பது ஐயமே! மாமன்னர் குலசேகராழ்வார், "ஓ கிருஷ்ணா ! இப்போதே எனது எண்ணங்கள் தாமரை மலர் போன்ற உமது பாத கமலங்களில் சரணடையட்டும். ஏனெனில், சளி, பித்தம் போன்ற பிணியால் அவதியுற்று, இறக்கும் தருவாயில் உம்மை நினைக்கும் வாய்ப்பு எனக்கு எப்படிக் கிட்டும்?” என்று கூறி “அப்போதைக்கு இப்பவே சொல்லி வைக்கிறேன்" என்று வயதான காலத்திற்கும் சேர்த்து இப்போதே ஆன்மீக சாதனைகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார். 


பகவத் கீதை சந்நியாசிகளுக்கு மட்டும்தான் என்றும் கீதையைப் படித்தால் குடும்ப வாழ்வைத் துறக்க வேண்டும் என்றும் கூறி ஏராளமானோர் பகவத் கீதையை ஒதுக்கி வைக்கின்றனர். ஆனால் சந்நியாசம் எடுக்க விரும்பிய அர்ஜுனன், கீதையை கேட்ட பின் சந்நியாசி ஆகவில்லை ; மாறாக குடும்ப வாழ்வில் இருந்த வண்ணமே தனக்குரிய கடமைகளைச் சரியாக செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார். எனவே, பகவத் கீதை, குடும்ப வாழ்வைத் துறப்பதற்காக உபதேசிக்கப்பட்டதல்ல; மாறாக, ஒவ்வொருவரும், குடும்பத்தில் இருந்தாலும் சரி, சந்நியாசத்தில் இருந்தாலும் சரி, தங்கள் நிலையில் இருந்த வண்ணம் எப்படி தங்கள் வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள முடியும் என்பதைக் கற்றுக் கொடுப்பதற்காக ஏற்பட்டதாகும். 


கீதையானது “இந்துக்களுக்கு மட்டும்தான்" என்றும், அதிலும் “ஆண்கள் மட்டும் படித்தால் போதும்" என்றும் நினைப்பவர்கள் ஏராளம். ஆனால் உண்மை அதுவல்ல. அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (இஸ்கான்) ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதரினால் உரை எழுதப் பட்டு பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையினால் வெளியிடப்படும் “பகவத் கீதை உண்மையுருவில்" என்ற நூலை ஜாதி மத வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினரும்-- பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள், முகம்மதியர்கள். யூதர்கள், பௌத்தர்கள், சமணர்கள் என அனைவரும் -- படித்துப் பயன்பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண், பெண் வேறுபாடின்றி அனைவரும் இந்நூலைப்படித்து பக்குவம் பெற்றுள்ளனர். இந்த உபதேசங்கள், குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டும்தான் அல்லது குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும்தான் என்று பகவத் கீதையின் எந்த ஓர் இடத்திலும் கு ஓர் இடத்திலும் குறிப்பிடப்படவில்லை . சமஸ்கிருதம் படித்தவர்களுக்கு மட்டும்தானா? கீதையானது தற்போது எல்லா மொழிகளிலும் கிடைக்கிறது. குறிப்பாக “பகவத் கீதை உண்மையுருவில்" மிகவும் எளிய நடையில் தமிழ், ஆங்கிலம் உட்பட 56க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது. எனவே சமஸ்கிருதம் தெரியாதவர்களும்கூட எளிதில் படித்துத் தெரிந்துகொள்ளலாம். அப்படியும் கீதை புரியவில்லை என்றால் அதற்கு காரணம் மொழியல்ல, நம் மனதே. ஆம். கலங்கிய நீரில் முகம் காண இயலாததுபோல, குழம்பிய மனதில் கீதையை புரிந்துகொள்ள இயலாது. இதனை சரிசெய்ய "பகவத் கீதை உண்மையுருவில்” நூலில் வழிகாட்டுதல்கள் உள்ளன. இஸ்கான்கோயில்களில் கீதையை நன்கு புரிந்துகொள்வதற்கான விளக்க வகுப்புகள் நடைபெறுகின்றன. எனவே, கீதையை படிக்க மொழி ஒரு தடையல்ல.


Popular posts from this blog

பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன்  )

பாம்புகளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்