கலியுக முடிவில் பிரளயம் வருமா?
பிரளயம் எப்பொழுது தான் வரும்? (இந்து தர்ம சாத்திரங்கள் முன்னிறுத்தும் நுட்பங்கள்):
*
கலியுக முடிவில் பிரளயம் வருமா? வராது, கலியுகத்தின் கால அளவு 4,32,000 ஆண்டுகள், தற்பொழுது அதில் சுமார் 5122 (18.2.2020) வருடங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 4,27,000 ஆண்டுகள் கடந்த பின்னர் மீண்டும் முதல் யுகமான கிருத யுகம் (சத்ய யுகம்) துவங்கப் பெறும்.
*
சதுர்யுகமான
கிருத/ சத்ய யுகம் -17,28,000
; திரேதா யுகம் 12,96,000;
துவாபர யுகம் 8,64,000 ;
கலி யுகம் 4,32,000 ஆகியவைகளின் காலஅளவு 4:3:2:1 எனும் விகிதாச்சாரத்தில் மொத்தம் 43,20,000 (43 லட்சத்து 20 ஆயிரம்) ஆண்டுகள். இக்கால அளவில் 71 சதுர்யுகங்களைக் கொண்டது ஒரு மன்வந்திரம்.
*
சரி! மன்வந்திரத்தின் முடிவில் பிரளய நிகழ்வு நடந்தேறுமா? அதுவும் இல்லை. இத்தகைய 14 மன்வந்திரங்களின் கால அளவு ஒரு கல்பம் என்று குறிக்கப் பெறும் (சுமார் 1000 சதுர் யுகங்கள்).
*
அப்பொழுது கல்பத்தின் இறுதியில் தான் பிரளயமா எனில் ஆம், 14 மன்வந்திரங்கள் அல்லது 1000 சதுர்யுகங்களைக் கொண்ட ஒரு கல்பத்தின் முடிவில் நிகழ்ந்தேறும் பிரளயத்தில், 14 உலகங்களில் பூமி மற்றும் அதற்கு மேலுள்ள 2 உலகங்கள் (புவர் லோகம் & சொர்க லோகம்) மட்டும் முழுவதுமாக அழிவுறும்.
இது பிரம்மாவின் ஒரு நாளுடைய முதல் பகுதி என்று சாத்திரங்கள் குறிக்கின்றது, அந்நாளின் இரண்டாம் பகுதி முழுவதும் பிரளயம் நீடித்திருக்கும் (அதாவது 432 கோடி வருடங்களுக்கு). பின் மீண்டும் மறுநாள் காலை பூமி முதலான மூன்று உலகங்களுக்கும் படைப்பு துவங்கப் பெறும்.
*
இவ்விதமாய் தற்பொழுதுள்ள பிரம்மாவுக்கு 50 ஆண்டுகள் கடந்துள்ளது (அதாவது இரண்டு கல்ப கால அளவினைக் கொண்ட ஒரு நாள் மாதமாகி, அம்மாதங்கள் பன்னிரண்டு கடந்து ஒரு வருடமாகி, அவ்வருடங்கள் நூறினைக் கொண்டது பிரமனின் ஆயுள்).
பிரமனின் 50 ஆண்டுகள் ஒரு பரார்த்தம் என்று குறிக்கப் பெறும். தற்பொழுது நடந்தேறி வருவது இரண்டாம் பரார்த்தத்தின் முதல் கல்பமான சுவேத வராக கல்பம், அதன் 14 மன்வந்திரங்களில் தற்பொழுது நடைபெறுவது 7ஆம் மன்வந்திரம், அதன் 71 சதுர்யுகங்களுள் தற்பொழுது நடந்தேறி வருவது 28ஆம் சதுர்யுகம், அதன் நான்கு யுகங்களில் கலியுகம், அதன் 4,32,000 ஆண்டுகளில் சுமார் 5122 (கிமு 3102 வருடம் பிப்ரவரி மாதம் 18 தேதி அன்று கலியுகம் ஆரம்பம் ஆனது கிபி 2020 கூட்டினால் 5122) ஆண்டுகள் கடந்துள்ளது.
*
பிரமனுக்கு 100 ஆண்டுகள் நிறைவுறும் வேளையில் 14 உலகங்களும் மகாப்பிரளயத்தில் முற்றிலுமாய் அழிவுறும், ஒரு பிரம்மதேவரின் ஆயுள் காலம் என்பது காரணோதக ஸாயி விஷ்ணுவின் ஒரு மூச்சு காற்று வெளியே விட்டு உள்ளே இழுக்கும் காலம்
மஹா பிரளயத்தின் போது பிரம்ம தேவர் பக்தி செய்திருந்தால் வைகுண்ட பிராப்தி அடைவார். இம்மகா பிரளயம் காலவரையின்றி நீண்டிருக்கும், பின் புதியதொரு பிரமன் (மேற்குறித்துள்ள யுககணக்குகளின் வண்ணம்) படைப்புத் தொழிலையேற்று நடத்தி வருவார்.